வியாழன், 3 செப்டம்பர், 2009

ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?

தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை "மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition" என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்: "பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை"என்கிறார். வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில், லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப் பதவி இல்லை என காங்கிரஸ் கூறிவிட்டது.இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.இதனைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது:"காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது.நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறை கையாளப்பட்டது.ஒரு ஏகாதிபத்திய,யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம் முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்"எனக் கண்டித்துக் கூறுகிறார்.(quoted in A Short History of India and Pakistan) காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem) இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.நேருவின் பேட்டியால் நிலை மாறியது ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது."அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வு"என முடிவாக ஜின்னா கூறிவிட்டார். "நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டது"என மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக